கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..
TV9 Tamil News March 09, 2026 10:48 AM

சென்னை, மார்ச் 09: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று நீலகிரி, தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து கோடை வெளியில் படிப்படியாக தனது கோரத்தை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. அதேசமயம், நீலகிரி, குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது.

இதையும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

இன்று மழைக்கு வாய்ப்பு:

இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

நாளை வானிலை நிலவரம்:

நாளை (மார்ச் 10) தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 11-03-2026 மற்றும் 12-03-2026: தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, 13-03-2026 மற்றும் 14-03-2026: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வெப்பநிலை மாற்றம்:

09-03-2026 முதல் 12-03-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும் என்பதால், குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம், இந்த நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : “இன்னும் 2 வாரத்தில் ஊழலில் சிக்கிய அமைச்சர் சிறைக்கு செல்வார்”.. பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.