ஒரு கோவிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடைசியாக கடந்த 2009ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதையடுத்து, அடுத்த 12 ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய குடமுழுக்கு, 2018ஆம் ஆண்டு கோவில் மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், குடமுழுக்கு நடத்த கோவில் சார்பாக ரூ.15.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நன்கொடையாக ரூ.5.16 கோடி கிடைத்துள்ளது என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிபத்து நிகழ்ந்த வீரவசந்தராயர் மண்டபத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததால் அதற்கான பணிகள் நடந்துவருகின்றன.
அனைத்து பராமரிப்புப் பணிகளும் கோவில் திருப்பணிகளும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும். எனினும், சித்திரை மாதம் தொடங்கி அடுத்தடுத்து சில திருவிழாக்கள் நடைபெற உள்ளன. எனவே, அவற்றுக்கு இடையூறின்றி செப்டம்பர் 17ஆம் தேதி கோவில் குடமுழுக்கை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.