சென்னை, மார்ச் 10: இலவசம், இலவசம் என அறிவித்து கொண்டே போனால், நாடு அடமானத்திற்கு வந்து விடும் என விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி, தவெக சார்பில் மகளிர் தின விழா மகாபலிபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த மார்ச் 7ம் தேதி நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், அண்ணனின் கல்யாண சீர், அண்ணபூரணி சூப்பர் சிக்ஸ், தாய்மாமன் சீர் என பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் ஒரு சிலவற்றை அவ்விழாவில் அறிவித்தார். அவ்வாறு அவர் அளித்த வாக்குறுதிகள் திமுக, அதிமுகவின் வாக்குறுதிகளை போன்றே இலவசங்களை இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் படிக்க: சிபிஐ விசாரணையில் இருந்து விலக்கு வேண்டும்.. தவெக தலைவர் விஜய் தரப்பில் கோரிக்கை..
விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்:அதன்படி, பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும், மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் 60 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும் (மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலக்கு), அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள், அண்ணன் சீர் திட்டத்தில் – 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை, காமராஜர் கல்வி உறுதித் திட்டத்தில் 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய் (அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை, வெற்றிப் பயணத் திட்டத்தில் அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் வாக்குறுதிகளை அருவருக்கிறேன்:இந்நிலையில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக தலைவர் விஜய் அறிவித்த தாலிக்கு தங்கம், தாய் மாமன் முறையில் தங்கம், ரூ.2,500 ரொக்கம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து உங்கள் கருத்து என்ன? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது, இது போன்ற முறையை அருவருக்கிறேன். வெறுக்கிறேன். இந்த அறிவிப்புகளை நிறைவேற்ற நிதி எங்கே இருக்கிறது. ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது.
அதிமுகவின் ஒரு கிளையாக தவெக:இலவசம், இலவசம் என அறிவித்து கொண்டே போனால், நாடு அடமானத்திற்கு வந்து விடும். நான் வந்தால் சாராயத்தை ஒழிப்பேன் என அவர் (விஜய்) சொல்ல மறுக்கிறார். விஜய்க்கு தனி தத்துவம், கோட்பாடு என ஒன்றும் கிடையாது. ஊழல் கட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் உடன் உள்ளனர். அதிமுகவின் ஒரு கிளையாக தவெக உள்ளது. அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் அரை பவுன் கொடுத்தார்கள். இவர் ஒரு பவுன் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். ஸ்டாலின் ரூ.1,000 உரிமைத்தொகை கொடுத்தார். எடப்பாடி பழனிசாமி ரூ.2 ஆயிரம் கொடுப்பதாக கூறினார். இவர் ரூ.2,500 கொடுப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: “விஜய் மக்கள் சந்திப்பை முடக்க சதி”.. தமிழகம் முழுவதும் தவெக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..
கடைசியில் பிம்பிளிக்கி… பிளாப்பி:இயக்குனர் பாண்டியராஜனின் திரைப்படம் ஒன்றில் ஒரு ஏலக்காட்சி வருவது போல ரூ.2 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என்று சொல்லி கடைசியில் பிம்பிளிக்கி… பிளாப்பி… என்று தான் ஆகும். அது எப்ப பிளாப் ஆகிறது என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது கொடுமைதான். வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம் என ஒருவரும் சொல்வதில்லை. சொல்கிற எங்களை யாரும் கவனிப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.