என்.டி.ஏ கூட்டணிக்கு வாருங்கள் விஜய்.. அறிக்கை வெளியிட்ட பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்..!
Webdunia Tamil March 10, 2026 12:48 PM

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்கு அழைத்து அறிக்கை வெளியிட்ட பாஜக நிர்வாகி ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பாஜக மாநில செய்தி தொடர்பாளராக இருந்த பிரசாத், சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்கு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இது கட்சியின் தலைமைக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட தன்னிச்சையான முடிவு என கருதப்படுகிறது.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அவர் செய்தி தொடர்பாளர் மற்றும் ஊடகத்துறை பொறுப்பாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக நிர்வாகி ஒருவரின் இந்த அழைப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியது. இருப்பினும், கட்சி தலைமை இந்த நடவடிக்கையின் மூலம் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.