நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் நுகர்வைக் குறைக்கப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, வரும் 16-ஆம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாக ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும், 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு பாதியாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த சிக்கலான சூழல் நீடிக்கும் என்பதால், மின்சாரம் மற்றும் எரிபொருளை சேமிக்கப் பாகிஸ்தான் அரசு இத்தகைய கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.
Edited by Siva