கரூரில் சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் அளித்தனர். இதையடுத்து, டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில், செந்தில் பாலாஜி நேற்று ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த சம்மனை, செந்தில் பாலாஜியோ, அவரது அலுவலக ஊழியர்களோ பெறவில்லை. செந்தில் பாலாஜிக்கு 'இ - மெயில்' வாயிலாகவும், 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதற்கும், செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. சம்மனை ஏற்று விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அப்படியொரு சம்மன் எதுவும் தனக்கு வரவில்லை என, செந்தில்பாலாஜி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன..
வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.