`அதிமுக வேட்பாளர்களின் ப்ளஸ் மைனஸ் ஃபைல்; விஜய்யுடன் கூட்டணி பேச்சு' - சசிகலாவின் கணக்கு பலிக்குமா?
Vikatan March 10, 2026 02:48 PM

சசிகலா புதிய கட்சிக்கான கொடியை அறிவித்த பிறகு மாவட்டம் வாரியாக தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதில் மும்முரமாக இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களை சந்தித்தார். இதில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொருவரிடமும் தனி தனியாகவும் கருத்துக்களை கேட்டிருக்கிறார் சசிகலா.

அப்போது, `என்னால் பலனடைந்த யாரும் இன்று என்னுடன் நிற்கவில்லை, தொண்டர்களாகிய நீங்கள் எனக்கு பக்க பலமாக நிற்பது எனக்கான பலம். எதை பற்றியும் யோசிக்காமல் உண்மையாக உழையுங்கள் நிச்சயம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.

துரோகத்தை வீழ்த்தி, நாம் யார்னு நிரூபிக்கணும். இது தான் நமது குறிக்கோள். ஒரு வாரத்திற்குள் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பேன். இங்கே இருப்பவர்கள் தான் வேட்பாளர், நான் சொல்வதை களத்தில் செயல்படுத்துங்கள், அது போதும். நல்லது நடக்கும்'னு சொல்லி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சசிகலாவுக்கு முன்பிருந்த ஆதரவு இப்போது இல்லை, அவர் பின்னால் பெரிய அளவில் ஆதரவாளர்களும் இல்லை என்கிற விமர்சனம் பரவலாக முன் வைக்கப்படும் சூழலில் சசிகலாவின் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான சிலர்.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வந்த சசிகலா, ஆளும் திமுக அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் நல்லது நடக்கும், அதிமுக-வில் திரும்பவும் அதிகார மையமாக வலம் வரலாம் என நினைத்திருந்தார் சசிகலா. ஆனால் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோருக்கு கட்சியில் இடம் இல்லைனு திட்டவட்டமாக பேசி வந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாஜக மேலிடமும் டி.டி.வி.தினகரனுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கு அளிக்கவில்லை என்கிற ஆதங்கம் ஏற்பட்டது.

கட்சி பிளவுபடக் கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக நடந்த அனைத்தையும் கவனித்து கொண்டு பொறுமையாக இருந்தார். ஜெயலலிதாவுடன் இருந்து திரைமறைவில் அரசியல் மூவையும் செய்தவர் சசிகலா என்பது இன்று அதிமுகவின் அதிகாரமையாக இருக்கும் அனைவருக்கும் தெரியும். ஆனால் நம்மை ஒரு கிள்ளு கீரையாக நினைக்கிறார்கள். நமக்கான அங்கீகாரத்தை தர மறுக்கிறார்கள் என்பதால் இனியும் பொறுமையாக இருக்க முடியாது, நாம் யார்னு காட்ட வேண்டும் என்கிற கட்டாயத்தில் புதுகட்சி பிளானுடன் களமிறங்கி இருக்கிறார்.

ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள், துரோகத்தை வீழ்த்துவேன் என கூறி வந்த தினகரன், அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்றதுமே, அவரை பற்றி பேசாதீர்கள், நாம் எப்படி முன்னே போவது என்பதை மட்டும் சொல்லுங்கள் என்றாராம்.

அதிமுக, அமமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார். தற்போதைய சூழலில் புதிய கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் நெருங்கி விட்டதால் அதற்கான அவகாசமும் இல்லை என்பதால் தனது தம்பியால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிடர் கழகத்தை தூசு தட்டி அதன் மூலம் தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

கூட்டத்தில் கூட்டணி குறித்து பேச்சுக்கள் எழ ஆதரவாளர்கள் பலரும் பாஜக கூட்டணிக்குள் சென்று விடக்கூடாது என்கிற கருத்தை முன் வைக்க, `நீங்கள் விரும்புகிற கூட்டணி அமையும்' என்றாராம். தவெக தலைவர் விஜய் தரப்புடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக தெரிகிறது.

இது அமைந்தால் 20 தொகுதிகளில் போட்டியிடுவார்கள், ஒரு வேளை அமையவில்லை என்றாலும் தனித்து நிற்கவும் தயாராகத்தான் இருக்கிறார். தேர்தல் செலவுக்கான பசையும் தடையின்றி கைக்கு வந்து சேரும்னு ஆதரவாளர்களிடத்தில் சொல்லியிருக்கிறார்.

சசிகலா

அதிமுக-வில் வேட்பாளராக களம் இறங்க இருப்பவர்களின் ப்ளஸ் மைனஸ் குறித்த விபரங்களை திரட்டி ஃபைல் ஒன்றை கையில் வைத்திருக்கிறாராம். அதற்கேற்ப வேட்பாளர்களை நிறுத்துவது தான் திட்டம். ஒண்ணா இருக்கணும்னு நினைக்காமல், தன்னோட தியாகத்தை மதிக்காமல் ஆணவத்தோடு இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டணும் என்கிற குறிக்கோளுடன் தங்களுக்கு சாதகமாக இருக்கும் தொகுதிகள் குறித்தும் கணக்கெடுத்துள்ளார்.

2 சதவீத வாக்குகளை குறி வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். இந்த 2 சதவீத வாக்குகள் நம்மை யார்னு உணர்த்தும், தேர்தல் முடிவுக்கு பின்னர் நிச்சயம் வருத்தப்படுவார்கள் என்கிற சசிகலாவின் கணக்கு பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தெரிய வரும்" என்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.