இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் வழங்கும் ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போர் தொடுத்து வருகிறது. இதையடுத்து ஈரான் வளைகுடா நாடுகளையும் தாக்கி வருகிறது.. இதன் காரணமாக இந்தியாவில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டிருக்கிறது.. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக எரிபொருட்களான கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயரும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உருவாகியிருக்கிறது..
இந்தியாவில் பல மாவட்ட மாநிலங்களிலும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.. இதனால் வணிக சிலிண்டரை பயன்படுத்தும் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பெங்களூரில் இன்று ஹோட்டல்கள் மூடப்பட்டது. அதேபோல், மதுரை, கோவை, போன்ற மாவட்டங்களில் மூன்று நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் நிலை உருவாகியிருக்கிறது.
ஒருபக்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலரும் கள்ளச் சந்தையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் சிலிண்டரை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு எஸ்மா சட்டத்தை அமல் செய்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் எஸ்மா சட்டத்தை மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தியிருக்கிறது..