தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், ஜப்பான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான உயர்தரப் பயிற்சியில் பங்கேற்கத் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி அகஸ்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டம் இணைந்து நடத்திய சிறப்புத் திறன் மதிப்பீட்டுப் போட்டிகளில் பங்கேற்றுத் தேர்வானார். சிறந்த இளங்கலை திறமையாளர்களுக்கான திட்டத்தின் கீழ் மார்ச் 27 வரை இரண்டு வாரங்கள் ஜப்பான் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெறுகிறார்.

நவீன மென்பொருள் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் ஜப்பானியத் தொழில் நுட்ப மேலாண்மை முறைகளை நேரடிப் பயிற்சியின் மூலம் கற்றறிதல். மாணவி அகஸ்டாவைப் பாராட்டும் விதமாகக் கல்லூரியில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரிப் பொறுப்பு முதல்வர் ஜோசப் சுரேஷ் மற்றும் மூத்த பேராசிரியர் ஜமுனா ராணி. கணினி அறிவியல் துறைத் தலைவர், பேராசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் அகஸ்டாவிற்கு வாழ்த்துத் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். ஒரு கிராமப்புற அரசு கல்லூரியில் பயின்று, சர்வதேச அளவில் ஜப்பான் வரை செல்லத் தேர்வானது அம்மாவட்டத்திற்கே பெரும் பெருமையாகக் கருதப்படுகிறது.