அவசரப்பட்டு தங்கம் வாங்காதீங்க... மேலும் குறையவே வாய்ப்பு - நிபுணர்கள் எச்சரிக்கை!
Dinamaalai March 19, 2026 11:48 PM

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, இன்று (மார்ச் 19) ஒரே நாளில் யாரும் எதிர்பாராத விதமாகப் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.  இன்றைய விலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ₹5,360 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹1,11,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ₹670 குறைந்து ₹13,900 ஆக உள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ₹10,000 சரிந்து ₹2,65,000-க்கு விற்பனையாகிறது.

பொதுவாகப் போர்ச் சூழல் நிலவும்போது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலை உயரும். ஆனால், தற்போது சர்வதேசச் சந்தையில் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து கச்சா எண்ணெய் மற்றும் டாலர் பத்திரங்கள் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கத்தின் மீதான தேவை தற்காலிகமாகக் குறைந்து விலை சரிந்துள்ளது.

இது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், "வரும் நாட்களில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு மேலும் ₹2,000 முதல் ₹4,000 வரை குறையக்கூடும். ஆனால், போர்ச் சூழல் தணிந்து முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பும்போது, விலை இதற்கு முன்பு இருந்ததை விட மிக உச்சமான நிலைக்குச் செல்லும் வாய்ப்புகள் அதிகம்" என்று எச்சரித்துள்ளார்.

சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்திருக்கிறது. சர்வதேசப் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களே இந்தத் திடீர் சரிவுக்கு முக்கியக் காரணமாகும். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.