ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் - தேசிய அளவில் 19.6% பங்களிப்புடன் வரலாற்றுச் சாதனை!
Dinamaalai March 20, 2026 12:48 AM

இந்தியாவின் ஒட்டுமொத்த ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மத்திய அரசின் புள்ளிவிபரங்களின்படி, நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முன்னிலை வகிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 19.6% பங்களிப்பைத் தமிழ்நாடு மட்டுமே வழங்கியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து குஜராத் (11.4%), மகாராஷ்டிரா (11.2%), மற்றும் உத்தரப் பிரதேசம் (9.5%) ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தமிழகத்தின் இந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள "ஜவுளிப் பள்ளத்தாக்கு" எனப்படும் பின்னலாடை ஏற்றுமதியின் தலைமையகமாக விளங்கும் திருப்பூர், சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகளை வழங்கி வருகிறது. அதே போன்று ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்கள் விசைத்தறி மற்றும் வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்களின் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றுகின்றன.

"தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" எனப்படும் கோவை, நூல் உற்பத்தி மற்றும் ஜவுளி இயந்திரங்கள் தயாரிப்பில் முன்னிலையில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இருந்து மேசை விரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்ட வீட்டு அலங்கார ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.

தமிழக அரசின் 'ஜவுளி மற்றும் ஆடைத் தொழில் கொள்கை' மற்றும் மத்திய அரசின் 'பி.எம். மித்ரா' மெகா ஜவுளிப் பூங்காத் திட்டம் போன்றவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய உந்துதலாக அமைந்துள்ளன. குறிப்பாக, விருதுநகர் போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் புதிய ஜவுளிப் பூங்காக்கள் வருங்காலத்தில் இந்த ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவுளித் துறை தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது. குறிப்பாக, லட்சக்கணக்கான பெண்களுக்கு இத்துறை வாழ்வாதாரம் அளித்து வருகிறது. ஏற்றுமதியில் முதலிடம் பிடித்திருப்பது மாநிலத்தின் ஜிடிபி வளர்ச்சிக்கு மிகப்பெரிய வலுசேர்த்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.