தெலங்கானா மாநிலத்தில் தன்னுடைய செல்லப்பிராணியான பூனை உயிரிழந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மீர்பேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் படக்பேட்டை, வெங்கடாதிரி காலனியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாபிந்து என்ற இளம்பெண் இளநிலை கல்லூரி படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். ஹிமாபிந்து ஒவ்வொரு நாளும் கல்லூரியிலிருந்து திரும்பிய பிறகு முழு நேரத்தையும் பூனையுடன் செலவழித்து வந்துள்ளார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் அந்த பூனை இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஹிமாபிந்து சாப்பிடாமல், அழுதுக்கொண்டே இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் வீட்டிலிருந்த யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஹிமாபிந்து வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த ஹிமாபிந்துவை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க முயற்சி செய்தனர்.
ஆனால் ஏற்கனவே ஹிமாபிந்து உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீர்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஹிமாபிந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சட்டப்படி விசாரணை முடிவுபெற்று உடலானது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வளர்ப்பு பூனை இறந்த துக்கம் தாளாமல் இளம்பெண் விபரீத முடிவெடுத்தது பெரும் சோகமாக மாறியுள்ளது.
பலர் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். நாய், பூனை, கிளி, அணி, எலி என விதவிதமான உயிரினங்களை வளர்க்கிறார்கள். பறவைகள் முதல் விலங்குகள் வரை பலவற்றிற்கும் தங்கள் இடங்களில் இடமளிக்கிறார்கள். அவற்றை செல்லப்பிராணிகளாகக் கருதாமல், குடும்ப உறுப்பினர்களைப் போலவே நடத்துகிறார்கள். சக மனிதர்களிடத்தில் காட்டும் அன்பை விட அதிகமாக காட்டுகிறார்கள். உணவு, உடை, இருப்பிடத்தில் வசதி என பல செல்லப் பிராணிகளுக்கு செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் மனிதர்களை போல தான் உயிரினங்களும் ஒருநாள் இறக்கும். அதற்காக இதுபோன்ற கடின முடிவுகளை எடுப்பது சரியல்ல என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.