சிவகாசி சட்டமன்றத் தொகுதி, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கியமான தொகுதிகளில் ஒன்றாகும். இது விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குக் கீழ் வரக்கூடிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். சிவகாசி, திருத்தங்கல், ஆனையூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இந்தத் தொகுதியில் அடங்குகின்றன. சிவகாசி “குட்டி ஜப்பான்” என அழைக்கப்படும் அளவிற்கு தொழில்துறையில் முன்னிலையில் இருக்கும் பகுதியாகும். பட்டாசு தொழில், தீப்பெட்டி உற்பத்தி, அச்சுத் தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. இந்தப் பகுதியிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தத் தொகுதியில் சுமார் 2½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் சுமார் 78,947 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் 61,628 வாக்குகள் பெற்றார். மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சியும், நான்காவது இடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகுதியை பொருத்தவரையில், அதிமுக பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 1977ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அதிமுக சுமார் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. எனவே, இந்தத் தொகுதியில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.
“குட்டி ஜப்பான்” என அழைக்கப்படும் சிவகாசியில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் முக்கிய பிரச்சனை பட்டாசு தொழிற்சாலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளாகும். இதற்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என பல தசாப்தங்களாக கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தாலும், இதுவரை முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.
அதேபோல், பருவகால வேலைவாய்ப்பு பிரச்சனை, தொழிலாளர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஆகியவையும் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. ஆட்சி மாறினாலும், இந்தத் தொகுதியில் நிலைமை பெரிதாக மாறவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பலம் வாய்ந்ததாக இருந்தாலும், மக்களின் கோரிக்கைகளுக்கு யார் நிரந்தர தீர்வு வழங்குகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் டயானா என்ற வேட்பாளர் களமிறங்குகிறார். அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.