அணு ஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன்காரணமாக, மேற்காசியா பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் எரிவாயு இறக்குமதி மற்றும் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனையடுத்து நாட்டில் LPG பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், உண்மையான பயனாளர்களுக்கு மட்டுமே சிலிண்டர் சென்றடையும் வகையில் மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து உள்நாட்டு LPG பயனாளர்களுக்கும் e-KYC (Electronic Know Your Customer) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த e-KYC செயல்முறை மூலம் பயனாளர்களின் அடையாளம், முகவரி மற்றும் இணைப்பு விவரங்கள் சரிபார்க்கப்படும். இந்த நடைமுறையை நிறைவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் LPG சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், ஒரே நபரின் பெயரில் பல LPG இணைப்புகள் வைத்திருப்பது, போலியான பயனாளர்கள், மற்றும் தவறான பயன்பாடு போன்றவற்றை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தேவையற்ற வீணாக்கம் தடுக்கப்பட்டு, உண்மையில் தேவையுள்ள மக்களுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பயனாளர்கள் தங்களது LPG விநியோகஸ்தரை நேரில் அணுகி அல்லது ஆன்லைன் தளங்கள், மொபைல் ஆப்கள் மூலம் e-KYC செய்யலாம். அதற்காக ஆதார் அட்டை, மொபைல் எண் போன்ற விவரங்கள் அவசியமாக இருக்கும். சில இடங்களில் OTP அல்லது பயோமெட்ரிக் மூலம் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.
குறித்து புதிய அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் உடனடியாக e-KYC செயல்முறையை முடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில், எதிர்காலத்தில் LPG சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.