New Income Tax Rules: வந்தாச்சு புது ரூல்ஸ்..! ஏப்.1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் - எதில் லாபம்? கார் நிலைமை..
New Income Tax Rules: வருமான வரி தொடர்பான புதிய விதிகள் பொதுமக்களிடையே எப்படி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
வருமான வரி - புதிய விதிகள் வெளியீடு
நிதி அமைச்சகம் தனது 2026 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விதிகள் வரைவை மின்-அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த விதிகள், 1961 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்திற்குப் பதிலாக 2025 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர வழிவகுக்கின்றன.
குறிப்பாக, பட்ஜெட் 2026, தணிக்கை செய்யப்படாத வரி செலுத்துவோருக்கான வருமான வரி அறிக்கை ( ITR ) ITR-3 மற்றும் ITR-4 படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியை, குறிப்பிட்ட ஆண்டின் இறுதியிலிருந்து ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான வருமான வரி அடுக்குகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி சம்பந்தப்பட்ட வரி ஆண்டின் ஜூலை 31 ஆகவும், வரித் தணிக்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 31 ஆகவும் அப்படியே நீடிக்கிறது.
வருமான வரி - புதிய விதிகளுக்கான காரணம் என்ன?
வணிக நிறுவனங்களும், வரி செலுத்தும் தனி நபர்களும் வரி விதிப்பை எளிய முறையில் அணுகும் நோக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
- வரி விதிப்பு விதிகளின் எண்ணிக்கை 390-லிருந்து 190 ஆக குறைக்கப்பட்டுள்ளது
- வரி படிவங்களின் எண்ணிக்கை 511-லிருந்து 333 ஆக குறைக்கப்பட்டுள்ளது
- அனைத்து படிவங்களும் ஒரே மாதிரியாக தோற்றமளிப்பதுடன், அதில் இருப்பதை எளிதில் படித்து அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது
புதிய விதிகள் - தனி மனித தாக்கம் என்ன?
- பழைய வரி விதிப்பின் கீழ், ஒருவேளை உணவிற்கு ரூ.200 அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள கார்ப்பரேட் உணவு அட்டைகளுக்கு வரி இல்லை. இதில் ஊழியர்களுக்கான இலவச உணவு மற்றும் ஆல்கஹால் அல்லாத பானங்கள் அடங்கும். முன்பு ஒரு வேளை உணவிற்கு ரூ.50 ஆக இருந்த கட்டணத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.
- பழைய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டுக்கு ரூ.15,000 வரையிலான கார்ப்ரேட் பரிசு அட்டைகள், பரிசுச் சான்றிதழ்கள் அல்லது கூப்பன்களுக்கு வரி விலக்கு உண்டு
- வட்டி இல்லாத அல்லது சந்தை விலையை விடக் குறைவான வட்டி விகிதங்களைக் கொண்ட கடன்களுக்கு , சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, பாரத் ஸ்டேட் வங்கி ( SBI ) வழங்கும் கடன் விகிதத்திற்கும், உண்மையில் வசூலிக்கப்படும் விகிதத்திற்கும் உள்ள வித்தியாசத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்படும். ரூ. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்கள் மற்றும் மருத்துவ அவசரத் தேவைகளுக்காகப் பெறப்பட்ட கடன்களுக்கு வரி விலக்கு உண்டு
- வேலை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக முதலாளியால் வழங்கப்படும் வாகனங்களுக்கு, 1.6 லிட்டர் வரையிலான இன்ஜின் கொண்ட கார்களுக்கு மாதம் ரூ.8,000 வரியும் , பெரிய வாகனங்களுக்கு மாதம் ரூ.10,000 வரியும் விதிக்கப்படும் . இது பழைய மற்றும் புதிய என இரண்டு வரி விதிப்புகளுக்கும் பொருந்தும்
- 50% வீட்டு மற்றும் வாடகைப்படி ( HRA ) விலக்கு கோர அனுமதிக்கப்பட்ட பெருநகரங்களின் பட்டியலில் நான்கு புதிய நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன . சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தப் பட்டியலில் அகமதாபாத், பெங்களூரு, ஐதராபாத் மற்றும் புனே ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இது பழைய வரி விதிப்பு முறையின் கீழ் வருகிறது.
- பழைய வரி விதிப்பின் கீழ், ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான விலக்கு, மாதத்திற்கு ரூ.100- லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி விதிப்பின் கீழ் , ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் விடுதிச் செலவுக்கான உதவித்தொகையும் மாதத்திற்கு ரூ. 300- லிருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது
- ஏதேனும் ஒரு போக்குவரத்து அமைப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் படிக்கான விலக்கு, மாதத்திற்கு ரூ.10,000 அல்லது படியில் 70% (இதில் எது குறைவோ அது) என்பதிலிருந்து, மாதத்திற்கு ரூ.25,000 அல்லது படியில் 70% (இதில் எது குறைவோ அது) என உயர்த்தப்பட்டுள்ளது
- ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு நடவடிக்கையாக, மத்திய அரசு பங்கு வழித்தோன்றல்கள் (equity derivatives) பிரிவிற்கான பத்திரப் பரிவர்த்தனை வரியை ( STT ) உயர்த்தியுள்ளது. ஃபியூச்சர்ஸ் மீதான STT 0.02%-இலிருந்து 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் பரிவர்த்தனைகள் மீதான வரி 0.1%-இலிருந்து 0.15% ஆகவும் உயர்த்தப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகளில், பங்குப் பத்திரங்கள், ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் போன்ற பத்திரங்களின் ஒவ்வொரு கொள்முதல் மற்றும் விற்பனையின் மீதும் இந்த வரி விதிக்கப்படுகிறது.
- மதுபானங்கள் மீதான TCS விகிதம் 1%-லிருந்து 2%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
- தாராளமயமாக்கப்பட்ட பணப் பரிமாற்றத் திட்டத்தின் (LRS) கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணத் தொகுப்புகளுக்காக அனுப்பப்படும் பணத்திற்கான TCS விகிதம், தற்போதுள்ள 5% மற்றும் 20% என்ற இரட்டை விகிதத்திலிருந்து, வரம்பற்ற 2% என்ற ஒரே விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது
- LRS திட்டத்தின் கீழ் கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்படும் பணத்திற்கான TCS விகிதம் 5%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.