தமிழகத்தை உலுக்கிய வழக்கு : தர்ம முனீஸ்வரருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்..!
Top Tamil News March 21, 2026 09:48 AM

விளாத்திகுளம் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தில் மார்ச் 10- ஆம் தேதி காணாமல் போன 12-ஆம் வகுப்பு மாணவி, மறுநாள் மதியம் 02.00 மணியளவில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் வரை, மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே, குற்றவாளிகளைப் பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பலரிடம் விசாரணை நடத்தியும் 9 நாட்களாக குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்த நிலையில், சந்தேகத்திற்குரிய 5 பேரின் டி.என்.ஏ மாதிரிகளைப் பெற்று அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வேடநத்தம் கிராம காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று அங்கு ஒரு பைக் சென்றதை போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பைக் குறித்து விசாரித்தபோது, அது ராமநாதபுரத்திலிருந்து திருடப்பட்டது தெரியவந்தது.

அதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பைக்கில் வந்து சென்ற சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை மார்ச் 19 போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, கடந்த 2020-ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து, நகையை திருடிய வழக்கில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர் தற்போது ஜாமினில் வெளியே உள்ளார்.

பலத்தப் பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை ராஜபாண்டி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒருநாள் முழுவதும் அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்பு நேற்று (மார்ச் 20) பிற்பகல் தர்ம முனீஸ்வரனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, வரும் ஏப்ரல் 02- ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, தர்ம முனீஸ்வரனை போலீசார், பலத்தப் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.