மனைவி சமைப்பதில்லை என்பதைக் காரணமாகக் காட்டி விவாகரத்து கோரிய கணவருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2017-ல் திருமணமான இந்தத் தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், குடும்ப நல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியிருந்தது.
ஆனால், உயர் நீதிமன்றம் அதனை ரத்து செய்ததை எதிர்த்து கணவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தனது மனைவி சமைப்பதில்லை என்றும், குடும்பத்தினரை மதிக்காமல் மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும் கணவர் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலடியாக, தனது சம்பளத்தைப் பறித்துக்கொண்டதோடு, கூடுதல் வரதட்சணை கேட்டுத் தன்னைத் துன்புறுத்தியதாக மனைவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மனைவி என்பவர் வீட்டு வேலைக்காரர் அல்ல, அவர் உங்கள் சரிபாதி” என்று அதிரடியாகத் தெரிவித்தனர்.
சமைப்பது, துணி துவைப்பது போன்ற வேலைகளில் கணவர்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும், சமைக்கவில்லை என்பதற்காக விவாகரத்து கோர முடியாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
காலம் மாறிவிட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், தம்பதியினர் இருவரும் அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.