பறவை காய்ச்சல் பாதிப்பு.. பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..
TV9 Tamil News March 21, 2026 02:48 PM

சென்னை, மார்ச் 21, 2026: சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் நேற்று காலை முதல் 20க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து, சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில், அவை பறவை காய்ச்சல் பாதிப்பால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பூங்கா மூடப்பட்டுள்ளது. மேலும், பிற பறவைகளுக்கு இந்த நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கிருமிநாசினி தெளித்தல், பறவைகளின் எச்சங்கள் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கிண்டியில் பறவை காய்ச்சல்:

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள கரண்டிவாயன் நாரை, கூழைக்கடா, செங்கால் நாரை, கொக்கு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன. பறவை காய்ச்சல் என்பது பறவைகளின் எச்சங்கள், இறக்கைகள் மற்றும் உடல் பகுதிகள் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், பூங்கா மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பறவைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவி வருகிறது.

மேலும் படிக்க: மருமகளுடன் தகராறில் ஈடுபட்ட மாமியார்… கத்தியுடன் வந்த உறவினர்.. அடுத்து நடந்த கொடூர சம்பவம்!

பறவை காய்ச்சல் – சுகாதார துறை அறிவுறுத்தல்:

இதையடுத்து, சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, இறைச்சி கடைகளில் பணியாற்றுபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பறவைகளின் கழிவுகளை பொதுவழிகளில் கொட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்காவது பறவைகள் இறந்து கிடந்தால் உடனடியாக கால்நடைத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மனிதர்களுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இருமல், சளி, காய்ச்சல், சுவாசக் குறைபாடு போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகளாக இருக்கக்கூடும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பறவை காய்ச்சல் பாதிப்பு:

மேலும், பறவை காய்ச்சல் தொடர்பான தகவல்களுக்கு 104 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அண்மைக்காலமாக அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்த நிலையில், தற்போது கிண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இந்த பாதிப்பு பதிவாகியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.