மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில், தனது தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடி நீதி கிடைக்காததால் மனமுடைந்த 17 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸாரின் மெத்தனப் போக்கே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என கிராம மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதாவது தேவாஸ் மாவட்டம் பிக்குபுரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுனில் மாளவியா என்ற நபர், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களுடன் அன்றைய தினமே (வெள்ளிக்கிழமை இரவு) புகார் அளிக்கக் காவல் நிலையம் சென்றுள்ளார். ஆனால், “இது போன்ற வழக்குகளை விசாரிக்கப் பெண் அதிகாரி இருக்க வேண்டும்; தற்போது பெண் அதிகாரி பணியில் இல்லை” என்ற காரணத்தைக் கூறி போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தனது தாய்க்கு நேர்ந்த கொடுமையையும், அதற்குப் புகார் அளிக்கச் சென்ற இடத்தில் போலீஸார் காட்டிய அலட்சியத்தையும் கண்டு அந்தப் பெண்ணின் 17 வயது மகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதன் விளைவாக, நேற்று முன்தினம் காலை அவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவனின் மரணச் செய்தி பரவியதும் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அவரது உடலைச் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளி சுனில் மாளவியாவின் வீட்டின் மீது கல்வீசித் தாக்கியதுடன், அவரது வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அங்கு உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சுனில் மாளவியாவை போலீஸார் கைது செய்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்யத் தாமதம் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என உயர் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.