பேரன் காதலிக்குச் சித்திரவதை… ஆத்திரத்தில் மருமகளை வெட்டிக் கொன்ற தாத்தா… பதற வைக்கும் சம்பவம்…!!!
SeithiSolai Tamil March 21, 2026 04:48 PM

வேலூர் மாவட்டம் பாலூர் ஆலமரவட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியன் என்பவரது மூன்றாவது மனைவி கவிதா குடும்பத் தகராறு காரணமாகக் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனியனின் இரண்டாவது மனைவி ராஜேஸ்வரியின் மகனான அபிமன்யு சென்னையைச் சேர்ந்த பிரதீபா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பாலூருக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கு முனியனின் மூன்றாவது மனைவி கவிதா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பிரதீபாவை அடிக்கடி திட்டித் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அபிமன்யு வியாபார நிமித்தமாகப் பெங்களூரு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்த பிரதீபாவிடம் கவிதா மீண்டும் தகராறு செய்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்த அபிமன்யு தனது தாத்தாவான சாமுண்டியை வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற 77 வயதான சாமுண்டி மருமகள் கவிதாவைக் கண்டித்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சாமுண்டி தன்னிடம் இருந்த கத்தியால் கவிதாவின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரச் சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து சாமுண்டியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறில் முதியவர் ஒருவரே பெண்ணைக் கொலை செய்த சம்பவம் வேலூர் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.