“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
ஸ்ரீராம் ஆராவமுதன் March 21, 2026 06:14 PM

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வரும் நிலையில், போரை முடித்துக் கொள்ளலாம் என்று நினைப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இவை இரண்டையுமே ஏற்க முடியாது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கச்ச எண்ணெய் மீதான சலுகையை நிராகரித்த ஈரான்

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் படைகள் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இந்த போரால் ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ள்ளதால், எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. ஹார்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது.

இந்நிலையில், உயர்ந்துள்ள எண்ணெய் விலையை குறைக்கும் ஒரு முயற்சியாக, கடல் வழியாக ஈரானின் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தளர்த்துவதாக அறிவித்தது ட்ரம்ப் நிர்வாகம்.

இது தொடர்பாக, அமெரிக்க கரூவூலச் செயலாளர் பெசன்ட் வெளியிட்ட பதிவில், உலகளாவிய பயங்கரவாதத்தில் தலையாக ஈரான் விளங்குவதாகவும், அதிபர் ட்ரம்ப்பின் ஆபரேஷன் ஃப்யூரி நடவடிக்கை மூலம், எதிர்பார்த்ததை விட மிக வேகமாக இந்த முக்கியமான போராட்டத்தில் வெற்றி பெற்று வருவதாக கூறியிருந்தார்.

அதோடு, தற்போது கடலில் தேங்கியுள்ள ஈரானின் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிப்பது மற்றும் குறுகிய கால அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த தற்போதைய விநியோகத்தால், 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை உலக சந்தைகளுக்கு விரைவாக கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் இந்த சலுகையை நிராகரித்து, சர்வதேச சந்தைக்கு கூடுதல் கச்சா எண்ணெய்யை வழங்குவதற்கு தங்களிடம் கையிருப்பு ஏதும் இல்லை என ஈரான் அரசு திட்டவட்டமாக தெரிவித்தள்ளது. 

போர் நிறுத்த கோரிக்கையும் நிராகரிப்பு

இது மட்டுமல்லாமல், ட்ரம்ப்பின் போர் நிறுத்த கோரிக்கையையும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி நிராகரித்துள்ளார். போர் நிறுத்தம் குறித்து நேற்று பதிவிட்ட ட்ரம்ப், தங்களது நோக்கம் நிறைவேறும் தருவாயில் உள்ளதால், மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். எனினும், போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கு இடமில்லை என்றும், ஆனால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி, உத்தரவாதங்கள் மற்றும் இழப்பீடுகளுடன் போர் நிரந்தரமாக முடிவடையும் வரையில், ஈரான் தன்னை தற்காத்துக் கெள்ளும் என கூறியுள்ளார். போர் நிறுத்தத்தை ஈரான் ஏற்காது என்றும், கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் ஏற்படுவதை தங்கள் நாடு விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த போரை முழுமையாக முடிவுக்கு கொண்டுவரும் எந்த ஒரு முயற்சியையும் வரவேற்பதாகவும், கோரிக்கைகளை கேட்கவும், பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாகவும் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். அதோடு, சில நாடுகளின் தீர்வுக்கான முயற்சிக்கு மத்தியிலும், அமெரிக்கா தனது ஆக்கிரமிப்பை நிறுத்த தயாராக இருப்பதாக தெரிவில்லை என கூறியுள்ள அவர், அதனால், நாங்கள் எங்களை தொடர்ந்து பாதுகாத்துக் கொண்வோம் என்றும், போர் தொடர்பான எந்த ஒரு முடிவும், முழுமையானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஈரானுக்கு இழப்பீடு வேண்டும்“

அதோடு முக்கியமாக, இது போன்ற ஒரு மோதல் மீண்டும் நிகழாது என்ற உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும், ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளார் அப்பாஸ் அரக்சி.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.