புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு நாளை மறுநாளுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடையவுள்ளது. புதுச்சேரி முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கடந்த மாதமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்திருந்தாலும், என்டிஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ப்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 16 இடங்களில் போட்டியிட்டது. கூட்டணிக் கட்சிகளான பாஜக 09 இடங்களிலும், அதிமுக 05 இடங்களிலும் போட்டியிட்டன. இந்த முறை பாஜக அதிக இடங்களில் போட்டியிட தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
ஆனால் கடந்த முறை போட்டியிட்ட 16 இடங்களிலேயே என்.ஆர். காங்கிரஸ் போட்டி இடுவோம் என திட்டவட்டமாக இருந்தது. அத்துடன், கூட்டணிக்குள் வேறு கட்சிகளைச் சேர்க்கும் முடிவுக்கும் என்.ஆர்.காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அதிமுகவுக்கும், புது வரவான லட்சிய ஜனநாயக கட்சிக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, 'கூட்டணி தர்மத்திற்காகவே, இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளோம். அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும்.' என புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
''புதுச்சேரியில் உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 05 போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்திருந்தோம். இம்முறை கூட்டணி தர்மத்திற்காகவே 02 தொகுதிகளில் போட்டியிடவுள்ளோம். வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். அதேசமயம், நாங்கள் தர்மத்திற்கு அரசியல் நடத்தவில்லை. புதுச்சேரியில் அதிமுக ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கேட்கும்; கண்டிப்பாக அமைச்சரவையில் அதிமுக இருக்கும்.'' என்று தெரிவித்துள்ளார்.