மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) டி20 கிரிக்கெட் தொடரை பார்வையாளர்கள் இன்றி நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அதிரடி முடிவெடுத்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மைதானத்தில் ரசிகர்கள் இன்றி ‘மூடிய கதவுகளுக்குப் பின்’ (Closed doors) போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடருக்காக ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ரசிகர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணம் அடுத்த 72 மணி நேரத்திற்குள் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.
மேலும் திட்டமிட்டபடி வரும் மார்ச் 26-ஆம் தேதி பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் தொடங்க உள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெறுவது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.