பச்சிளம் குழந்தைக்கு கொடுக்கிற பாலில் கூட வாடா..? “வெள்ளை நிற விஷம்”… லாப வெறியில் 16 உயிர்கள் பறிப்பு… இன்னும் 100 குடும்பம்.. வெளியான பகீர் உண்மை..!!
SeithiSolai Tamil March 22, 2026 10:48 PM

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலக்கப்பட்டதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோதாவரி மாவட்டத்தில் உள்ள லாலாசெருவு, சௌதேஸ்வர் நகர் மற்றும் ஸ்வரூப் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பலருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர் வாந்தி, மயக்கம், கடும் வயிற்று வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. தொடக்கத்தில் இது சாதாரண நோய்த்தொற்று என கருதப்பட்ட நிலையில், பிப்ரவரி 22-ம் தேதிக்குப் பிறகு பாதிப்பு தீவிரமடைந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நர்சாபுரம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பால் பண்ணையிலிருந்து பால் வாங்கியது தெரியவந்தது. அந்தப் பண்ணையில் பாலின் அடர்த்தியை அதிகரிக்கவும், கூடுதல் லாபம் ஈட்டவும் ‘எத்திலீன் கிளைக்கால்’ (Ethylene Glycol) என்ற நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. இந்த நச்சு கலந்த பாலைக் குடித்ததால் பலருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney Failure) ஏற்பட்டது.

இந்த விஷப் பால் பாதிப்பால் குழந்தைகள், முதியவர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மேலும் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் டயாலிசிஸ் மற்றும் செயற்கை சுவாசக் கருவிகள் (Ventilator) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அந்தப் பண்ணையிலிருந்து பால் வாங்கிப் பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மனித உயிர்களுடன் விளையாடிய அந்த பால் பண்ணை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.