Dhurandhar 2 Box Office: விமர்சனம் வந்தா என்ன? நான்கே நாளில் தங்கல் சாதனையைத் தகர்த்த 'துரந்தர் 2'.. வசூல் விவரம்
ஜேம்ஸ் March 23, 2026 12:14 AM

ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படம் இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளைத் தவிடுபொடியாக்கி வருகிறது. மார்ச் 19 அன்று வெளியான இப்படம், வெறும் நான்கே நாட்களில் ₹400 கோடி வசூல் மைல்கல்லைக் கடந்து புதிய சரித்திரம் படைத்துள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதால், படத்தின் வசூல் வேகம் குறையாமல் நீடித்து வருகிறது.

ஏழு ஆண்டு கால தங்கல் சாதனை முறியடிப்பு

அமீர்கான் நடிப்பில் 2016-17ல் வெளியான 'தங்கல்' திரைப்படம் ₹387 கோடி வசூலித்து, கடந்த ஏழு ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக இருந்து வந்தது. தற்போது 'துரந்தர் 2' அந்த வசூலைத் தாண்டி, இந்திய அளவில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வர்த்தக இணையதளமான Sacnilk தகவல்படி, மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி இப்படத்தின் மொத்த இந்திய வசூல் ₹418.84 கோடியை எட்டியுள்ளது.

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய வசூல் விபரங்கள்

இப்படம் மார்ச் 18 அன்று நடைபெற்ற சிறப்புத் திரையிடல் (Paid Premiere) மூலமாகவே ₹43 கோடி வசூலித்து அதிரடித் துவக்கம் தந்தது. தொடர்ந்து வியாழக்கிழமை முதல் நாளில் ₹102.55 கோடியும், வெள்ளிக்கிழமை ₹80.72 கோடியும் வசூலித்தது. குறிப்பாக மார்ச் 21 சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் உள்ள 20,917 காட்சிகளில் 81.6 சதவீத ஆக்கிரமிப்புடன் ₹113 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை மட்டும் ₹79.57 கோடி வசூலாகியுள்ளது. ஞாயிறு இரவு நிலவரப்படி இந்தத் தொகை சனிக்கிழமை வசூலை விட அதிகமாக இருக்கும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

தமிழக வசூல் நிலவரம்

தமிழகத்தில் ரன்வீர் சிங்கின் முந்தைய படங்களை விட இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் ₹18.40 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக சென்னை, கோவை மற்றும் மதுரை போன்ற நகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு காட்சிகள் 90% ஆக்கிரமிப்புடன் (Occupancy) காணப்பட்டன. தமிழில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்பிற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திரையுலகினர் மத்தியில் எழுந்த ஆதரவும் விமர்சனமும்

துரந்தர் 2 திரைப்படம் ஒருபுறம் வசூலில் மிரட்டினாலும், மறுபுறம் திரையுலகினர் மத்தியில் இது விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இயக்குனர் ஆதித்யா மற்றும் ரன்வீர் சிங்கின் முயற்சியைப் பாராட்டும் அதே வேளையில், சிலர் படத்தின் மீது விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இப்படத்தை "மிகவும் பிரில்லியன்ட்" எனப் பாராட்டியுள்ளார். அதேபோல் நடிகர் அல்லு அர்ஜுன் "இது தேசபக்தி கலந்த ஸ்வாக்" எனத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர்களின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம்

ரன்வீர் சிங்கின் நடிப்பைப் பார்த்து வியந்த நடிகை சில்பா ஷெட்டி, அவரை "பப்பார் ஷேர்" (சிங்கம்) என வர்ணித்துள்ளார். காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி இப்படம் மிகவும் ராவ் மற்றும் அழுத்தமான கதைக்களத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இத்தனை ஆதரவும் எதிர்ப்பும் கலந்த சூழலிலும், ரசிகர்களின் பேராதரவு இப்படத்திற்குத் தொடர்ந்து கிடைத்து வருவதால், வரும் நாட்களில் இப்படம் இன்னும் பல புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.