மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 48 மணி நேரக் கெடுவிற்கு ஈரான் தற்போது ஒரு தந்திரமான பதிலடியைக் கொடுத்துள்ளது.
“அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கப்பல்களைத் தவிர, மற்ற அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களுக்கும் ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கும்” என ஈரானியப் பிரதிநிதி அலி மூசாவி அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரானின் எதிரி நாடுகளுடன் தொடர்பில்லாத கப்பல்கள், தெஹ்ரான் அரசுடன் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் எவ்வித தடையுமின்றி இந்த நீர்வழியைக் கடந்து செல்லலாம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
டிரம்பின் மிரட்டலுக்குப் பணியாமல், அதே சமயம் மற்ற உலக நாடுகளின் எரிசக்தி விநியோகத்தைத் தடுக்கவில்லை என்பதைக் காட்டும் ஈரானின் இந்த ராஜதந்திர நகர்வு, அமெரிக்காவிற்கு விடப்பட்ட நேரடிச் சவாலாகப் பார்க்கப்படுகிறது.