திமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி - தேர்தலுக்கான திட்டம் என்ன?
BBC Tamil March 23, 2026 01:48 AM
Velmurugan.T/Facebook

'அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது' என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்

ஆனால் 'கூட்டணியில் இருந்து போக வேண்டும் என முடிவு செய்த பின் காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார்' என திமுகவின் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.

அதேநேரத்தில் "வேல்முருகன் அரசியல் எதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டுவது என்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெற்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி வடிவத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் திமுகவுடன் 2019 ஆண்டு முதல் பயணித்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

"அதிகாரிகள் முதலமைச்சரை சுயமாக சிந்திக்க விடுவதில்லை"

கூட்டணி விலகலுக்கு அவர் தெரிவித்த காரணங்கள் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேல்முருகன், "திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் 5 இடங்கள் கேட்டோம் 1 தொகுதி தருவதாக சொன்னார்கள். இடங்கள் கூட பிரச்னை இல்லை எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம் ஆனால் அலட்சியமாக நடத்தப்பட்டோம்" என்று குற்றம் சாட்டினார்

"கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளே கோரிக்கைகளின்றி கூட்டணியில் இணையும்போது நீங்கள் மட்டும் கோரிக்கைகள் வைப்பதா? என்ற தொனியில் எங்களை அணுகினார்கள்" என்றார் அவர்.

"அதிகாரிகள் செய்யும் தவறுகளை சட்டமன்றத்தில் எடுத்து சொல்வதால், திமுக கூட்டணியில் இருப்பது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, இதனால் தேர்தல் அரசியல் வரை அவர்களின் பங்கு நீடிக்கிறது, அவர்கள் முதலமைச்சரவை சுயமாக சிந்திக்க விடுவதில்லை" என்று அவர் கூறினார்.

"வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு முதல் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பது வரை நான் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, அதனை நிறைவேற்ற விடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள்" என்றார் அவர்.

இதன் காரணமாக "திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன் " என்று அறிவித்தார் வேல்முருகன்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் நிலைபாடு குறித்து தெரிவித்த அவர் "அனைத்து தரப்பு மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஒத்தக்கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து," அறிவிப்பதாகக் கூறினார்.

"திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை"

" கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்த பிறகு காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார் வேல்முருகன்" என திமுகவின் அமைப்பு செயலாளரும் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், " 5 ஆண்டுகால தூக்கத்தில் இருந்து வேல்முருகன் இப்போதுதான் விழித்திருக்கிறார்" என்று தெரிவித்தார். "அவர் கூட்டணியில் இருந்து விலகியதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, ஏற்கனவே திமுக சின்னத்தில் போட்டியிட்டதால்தான் வெற்றி பெற்றார் அதுபோல திமுக வெற்றி பெறும்" என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், " கோரிக்கைகள் ஏற்கபடவில்லை அலட்சியமாக நடத்தப்பட்டதாக சொல்வது தவறு, ஆட்சி அமைந்த பிறகுதான் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியும்" என்று விளக்கமளித்தார்.

வேல்முருகனின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த அவர் "5 ஆண்டுகாலம் உடன் இருந்ததற்கு நன்றி, தற்போது கூட்டணியில் இருந்து விலகியதால் எங்கிருந்தாலும் வாழ்க" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து 2021 தேர்தலில் வெற்றி பெற்ற வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "தேர்தல் முடிந்த பிறகு வேல்முருகன் வருந்தக்கூடும்" என்று தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " திமுக மெகா கூட்டணி அமைத்திருந்தாலும் நீண்ட நாட்களாக உடன் பயணித்த வேல்முருகனை திமுக அரவணைத்து செல்வதுதான் நல்லது" என்று கூறினார்.

"அதே சமயம் அதிகாரிகளின் பிடியில் ஆட்சி இருப்பதாக எதை வைத்து வேல்முருகன் சொல்கிறார் என தெரியவில்லை, அவ்வாறு இருந்தால் அது தவறுதான்" என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், " அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவித்தற்கு பிறகு வட மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கு கூடியிருப்பதையும், வன்னியர் வாக்குகள் அல்லாத இடங்களில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் இதனை மறுத்த ஆர். எஸ் பாரதி "வன்னியர் வாக்குகள் அதிகமுள்ள விக்கிரவாண்டி இடைதேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது," என்று தெரிவித்தார்.

Velmurugan.T/Facebook

" வேல்முருகன் களத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், கடலூர் மாவட்டத்தில் அவர் மூலம் திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கக்கூடும் " என்று ப்ரியன் கூறினார்.

"திமுக குறித்து வேல்முருகன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நமக்கு தெரியாது ஆனால் அரசியலில் யதார்த்த நிலையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" என்றார் அவர்.

"வேல்முருகன் எம் எல் ஏவாக இருந்தால்தான் அவரை சந்திக்க வருபவர்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேச முடியும் கட்சியையும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர் இழக்கிறாரோ என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

"பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்பாத வேல்முருகன் விஜய், ராமதாஸ், சசிகலா ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தால் கடலூர் மாவட்டத்தில் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், அவர் யாருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்தே இவை அமையும்" என்று அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.