தமிழிசைக்கு 'நோ'.. அண்ணாமலை, குஷ்புவுக்கு 'எஸ்'! புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் நடந்தது என்ன?
ஜேம்ஸ் March 23, 2026 12:14 AM

புதுச்சேரி தேர்தலில் நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை சௌந்தரராஜன் பெயர் இடம்பெறாதது பரபரப்பை கிளப்பியுள்ளது. நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி, குஷ்பு உள்ளிட்டோர் பெயர் இருக்கும் போது தமிழிசை பெயர் மட்டும் நீக்கப்பட்டதற்கு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்:

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு விஷயத்தில் இழுபறி நீடித்து வந்த நிலையில் கூட்டணி உடையும் அளவுக்கு சென்றது. இறுதியில் பாஜக தலைமை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் கூட்டணி உறுதியானது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், பாஜக 10 தொகுதிகள், அதிமுகவுக்கு 2 தொகுதிகள், புதிய கட்சியான லஜகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

விடுப்பட்ட தமிழிசை பெயர்:

வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்தநிலையில் புதுச்சேரி தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 40 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை பெயர் இடம்பெறாதது விவாதமாக மாறியுள்ளது.

எல்.முருகன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், குஷ்பு உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலின் போது பேச்சாளர்கள் பட்டியலில் தமிழிசை பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த தமிழிசை மக்களவை தேர்தலின் போது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பினார். மக்களவை தேர்தலின் போது தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட அவர் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனிடம் தோல்வியடைந்தார். அவர் புதுச்சேரி ஆளுநராக இருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. ஆளுநர் மாளிகை நிதியை தமிழிசை சொந்த செலவுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இருந்தது. இலவச லேப்டாப் திட்டத்தில் தமிழிசை முறைகேடு செய்ததாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தார்.

ஊழல் புகார்?

அதனால் ஊழல் புகாரால் தான் புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இடம்பெறாததாக பேச்சு அடிபடுகிறது. பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை எதிர் தரப்பினர் கையில் எடுக்க வாய்ப்புள்ளதால் அதனை கணக்கில் வைத்து தமிழிசை பெயரை பாஜக தலைமை நீக்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.