ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 04-வது வாரத்தை எட்டியுள்ளது. அணுஆயுத போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல் + அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
அத்துடன், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் நீர்வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் கடல் மார்க்கமான வணிக போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதனால், உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை 02 நாட்களுக்குள் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் ஈரானும், எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் கடந்து செல்லலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுமுகமான பேச்சு வார்த்தை கடந்த 02 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, ஈரானின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை 05 நாள் இடைநிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனாலும், பேச்சு வார்த்தை குறித்து ஈரான் எந்த வகையான உறுதிப்படுத்தலும் அளிக்கவில்லை என்றும், இந்நிலையில் தான், அதிபர் ட்ரம்பின் ஈரான் மின்சார நிலையங்கள் மீதான 05 நாட்கள் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இது, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மீதான தாக்குதல் தற்காலிக நிறுத்தம் குறித்தான ட்ரம்ப் முடிவுக்கு கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஈரான் தூதரகம், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைப்போம் என்ற ஈரானின் எச்சரிக்கையையடுத்தே ட்ரம்ப் மின்சார நிலையங்களை தாக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஈரான் எந்த அறிவிப்பும் தரவில்லை.