கடந்த 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 06-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழுவின் துணைவேந்தர் நியமனம் மற்றும் பேராசிரியர்களுக்கான தகுதி குறித்த வரைவு விதிகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், திமுக எம்பிக்கள் கனிமொழி, ஏ.ராஜா, பி.வில்சன், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குறித்த வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்எல்ஏ எழிலரசன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, இந்த மனுவை நீதிபதி அனுப் ஜெயராம் பம்பானி விசாரித்தார்.
இந்த வழக்கில் டெல்லி போலீசார், எழிலரசனுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பிவிட்டு, மற்ற 10 பேருக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, நேற்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிஎன்எஸ் சட்டப்பிரிவு 215ன் படி, குறிப்பிட்ட சில குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுப்பதில் உள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணைக்கும் மற்றும் மேல் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது, இந்த வழக்கை முறையாக டெல்லி போலீசார் வியாரிக்கவில்லை. இதன் காரணமாக இது குறித்து டெல்லி போலீசார் ஆறு வார காலத்திற்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
அதுவரை ராகுல், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு தடை நீடிக்கும் என்றும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 14-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றுள்ளது.