Sonia Gandhi Admitted Hospital: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்டவராகவும் இருப்பவர் சோனியா காந்தி. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை.
இந்த நிலையில், சோனியா காந்திக்கு நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மருத்துவமனையில் அவருடன் அவரது மகள் பிரியங்கா காந்தி உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவக்குழு தகவல் தெரிவித்துள்ளது. சோனியா காந்திக்கு கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதமும் சோனியா காந்தி இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் காற்று மாசு காரணமாக ஏற்கனவே உள்ள ஆஸ்துமா பிரச்சினை தீவிரம் அடைந்து அனுமதிக்கப்பட்டார். கடந்தாண்டு அவருக்கு வயிற்றுக் கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சைக்காக இருந்தார்.
அவர் ஷிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வழக்கமான பரிசோதனையை கடந்தாண்டு மேற்கொண்டார். இவ்வாறு அவர் தொடர்ந்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே அனுமதிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் வேதனையை உண்டாக்கியுள்ளது.
சோனியா காந்தி தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அவர் அவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக அவர் இருந்தாலும், தற்போது வரை கூட்டணி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகளை அவரே எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கட்சி இடையேயான கூட்டணி நீடிப்பதிலும் சோனியா காந்தியின் பங்கு மிகவும் முக்கியமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1998ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நீடித்தார். அதன்பின்னரே ராகுல் காந்தியிடம் கட்சியை வழிநடத்தச் சொல்லிவிட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். பின்னர், மீண்டும் 2019ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தார். தற்போது, கார்கே அந்த பதவியை வகிக்கிறார்.
தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய பிறகு முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் மட்டுமே அவர் பங்கேற்று வருகிறார். மாநிலங்களவை விவாதங்களிலும் அவர் பெரியளவில் பங்கேற்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.