என்னுடைய முதல் படத்தின் இயக்குநரான சனோஜ் மிஸ்ரா பாலியல் ரீதியில் என்னை துன்புறுத்தினார் என கும்பமேளா புகழ் மோனாலிசா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற பிரயாக்ராஜின் மகா கும்பமேளாவின் போது புகைப்படக் கலைஞர்களால் அங்கு பாசி மாலை விற்றுக் கொண்டிருந்த மோனாலிசா மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அவரின் அழகும்,நீல நிற கண்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதன்மூலம் அவருக்கு பாலிவுட்டில் நடிப்பதற்கான வாய்ப்பும் வந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்குள் மோனாலிசா ஊரை விட்டு வெளியேறி கேரளா வந்து தனது காதலனை திருமணம் செய்துக் கொண்டார்.
அவரது காதலன் ஃபர்மான் கான் ஒரி இஸ்லாமியராக இருந்தபோதிலும் மோனாலிசாவை கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் மோனாலிசா படத்தை இயக்கி வரும் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இதனை லவ் ஜிஹாத் என குற்றம்சாட்டினார்.
கொச்சியில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மோனாலிசா தனது கணவருடன் கலந்து கொண்டார். அப்போது தன்னுடைய முதல் பட இயக்குநரான சனோஜ் மிஸ்ரா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அதாவது சனோஜ் மிஸ்ரா மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான நபராவார். அவருடைய படங்களில் யார் நடிக்க விரும்புவார்கள்?. சினிமா எடுக்கிறேன் என்ற பெயரில் சிறுமிகளிடம் தவறாக நடந்துகொள்கிறார். உண்மையில் சனோஜ் மிஸ்ராவின் பெயரை சொல்லவே எனக்கு வெட்கமாக உள்ளது.
படப்பிடிப்பின்போது பலமுறை என்னை 3 முறை தவறாக தொட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நான் அந்த கசப்பான அனுபவத்தை வீட்டில் சொன்னேன். ஆனால் என் குடும்பத்தினர், இது எனது முதல் படம் என்றும், நான் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்கள். என்னால் யாரிடமும் சொல்ல முடியவில்லை, அதனால் நான் அமைதியாக இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே நான் செய்த இந்த திருமணத்தை லவ் ஜிஹாத் என விமர்சித்து வருகின்றனர். தனது திருமணம் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிவரும் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன். நாங்கள் ஒரு கோவிலில் இந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அது அனைவருக்கும் தெரியும். எனினும் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா வேண்டுமென்றே பிரச்னை ஏற்பட வேண்டும் என்றும், மக்கள் சண்டையிட வேண்டும் என நினைக்கிறார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். இருவரும் அவரவர் மதங்களை மதிக்கிறோம் எனவும் கூறினார். கொச்சியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், மோனாலிசா கண்ணீர் மல்க இந்த விஷயங்களை வெளிப்படுத்தினார்.