நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினாலும் அவர் இன்னமும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை. அவ்வப்போது நிர்வாகிகளை சந்திக்கிறார்.. 2 மாதங்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் ஏதேனும் ஒரு ஊரில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அப்போது திமுகவை ஆவேசமாக திட்டி பேசிவிட்டு வீட்டுக்கு போய் விடுகிறார். அதன்பின் அவரை பார்க்க வேண்டும் என்றால் மீண்டும் இரண்டு மாதமாகும் என்கிற நிலைதான் இப்போது இருக்கிறது..
ஒருபக்கம் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. அதேநேரம் எவ்வளவு தொகுதிகளில் இந்த கட்சி களம் காண்கிறது என்பது தெரியவில்லை. வருகிற 27ம் தேதி வேட்பாளர் கூட்டத்தை நடத்தும் விஜய் அன்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 110 வேட்பாளர்களை அறிமுகம் செய்யவிருக்கிறார்.
அதேபோல் வருகிற 29ம் தேதி பெரம்பூரில் அவர் பிரச்சாரத்தை துவங்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அநேகமாக தொடர்ந்து 20 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது..