தோனியின் கடைசி சீசனா? – இம்பேக்ட் பிளேயராக விளையாடினால் ஓய்வு பெற வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கருத்து
Seithipunal Tamil March 25, 2026 04:48 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிக்கு, 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடைசி சீசனாக இருக்கலாம் என்ற பேச்சு கிரிக்கெட் உலகில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது 44 வயதான தோனி கடந்த சில ஆண்டுகளாக முழங்கால் வலி காரணமாக சிரமத்துடன் விளையாடி வருகிறார்.

இதற்கிடையில், தோனிக்கு மாற்றாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேடிங் செய்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தோனி தற்போது பேட்டிங்கில் பின்வரிசையில், பொதுவாக ஏழாவது அல்லது எட்டாவது இடத்தில் வந்து சில பந்துகள் மட்டுமே விளையாடுகிறார். மேலும் விக்கெட் கீப்பிங் செய்யும்போதும் முழங்கால் வலி காரணமாக சிரமம் ஏற்படுகிறது. இதனால், இந்த சீசனில் அவர் பெரும்பாலும் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாடலாம் என கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
“கிரிக்கெட் என்பது கால்பந்து போன்ற விளையாட்டு அல்ல. மைதானத்திற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு அணியை வழிநடத்த முடியாது. தோனியின் மிகப்பெரிய பலம் அவர் மைதானத்தில் இருந்து ஆட்டத்தை படிப்பது தான்.

ஒருவேளை அவர் இம்பேக்ட் பிளேயராக மட்டுமே விளையாட வேண்டிய நிலை வந்தால், தானாக முன்வந்து ஓய்வு பெறுவதே சரியான முடிவாக இருக்கும். தற்போது சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பிங் செய்ய சஞ்சு சாம்சன் தயாராக இருக்கிறார். அதனால் இந்த சீசன் தான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், 2026 ஐபிஎல் தொடருக்குப் பிறகு தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.