FLASH: தமிழகத்தில் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்… அர்ச்சனா பட்நாயக் திடீர் அறிவிப்பு…!!!
SeithiSolai Tamil March 25, 2026 10:48 PM

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அட்டவணையைத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டுள்ளார். கடந்த 15-ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் மார்ச் 30, 2026 (திங்கட்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் கடைசி நாள்: ஏப்ரல் 06, 2026 (திங்கட்கிழமை). தேர்தல் நாள்: ஏப்ரல் 23, 2026 வாக்கு எண்ணிக்கை: மே 04, 2026 நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்ச் 30 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட நாட்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இயலாது. அதன்படி மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) ஏப்ரல் 01 (புதன்கிழமை) ஏப்ரல் 03 (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை). இதன் காரணமாக மார்ச் 30, ஏப்ரல் 2, 4, 6 ஆகிய நான்கு தினங்கள் மட்டுமே வேட்பமான தாக்கல் செய்ய முடியும்

தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலைத் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால், மார்ச் இறுதியில் தமிழக அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.