மும்பை: நாய்க்கடிக்கு தடுப்பூசி போடுவதில் அலட்சியம்; சிறுமி பலி; மருத்துவர்கள் எச்சரிப்பது என்ன?
Vikatan March 25, 2026 11:48 PM

மும்பை நாலாசோபார பகுதியைச் சேர்ந்த காசிஷ் சஹானி(9) என்ற சிறுமி அங்குள்ள பகுதியில் 4 வது வகுப்பு படித்து வந்தார். அவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியில் நடைபயிற்சிக்குச் சென்றார்.

அப்போது வீட்டிற்கு வெளியில் நின்ற தெருநாய் ஒன்றுக்கு சிறுமி பிஸ்கெட் கொடுத்தார். அந்நேரம் சிறுமியை நாய் கடித்து விட்டது. உடனே சிறுமியை அவளது தாத்தா டாக்டரிடம் அழைத்துச்சென்றார். ஆனால் ஊசி போட்டுக்கொள்ள பயந்து அச்சிறுமி ஊசி போட்டுக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

அதன்பிறகு நாய் கடித்த புண் ஆறிவிட்டது. அதன் பிறகு அவர்கள் அதனைப் பற்றி கண்டுகொள்ளவில்லை. ஆனால் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிறுமியின் நிலை திடீரென மோசமடைந்தது. அவரது கண்கள் சிவப்பானது. உடனே சிறுமி உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

நாய்

அவரை அங்கிருந்து மும்பையில் உள்ள கஸ்தூர்பா மருத்துவமனைக்கு மாற்றி சிறப்புச் சிகிச்சை கொடுக்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அலட்சியமாக இருந்ததால் நாய்கடிக்கு சிறுமி இறக்க நேரிட்டது. மாநகராட்சி அதிகாரிகள் அச்சிறுமி வசித்த பகுதிக்குச் சென்று அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போன்ற அறிகுறி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ''ரேபிஸ் தடுக்கக்கூடியது, ஆனால் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அதன்பிறகு மிகவும் ஆபத்தானது. ரேபிஸ் என்பது நாய்க்கடி மூலம் உருவாகும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் வழியாகப் பரவுகிறது.

மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை இது பாதிக்கிறது. சாதாரணமாக நாய் கடித்தாலோ அல்லது லேசாக அதன் நகத்தால் அல்லது பற்களால் மனிதர்கள் உடம்பில் கீரல் போட்டாலோ உடனே தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்'' என்று தெரிவித்துள்ளனர்.

Doctor Vikatan: வளர்ப்பு நாய் நக்கியதால் தொற்று, மாரடைப்பு... இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டா?
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.