8 தொகுதிகள் தானா?… மேடையில் ஒன்று, திரையில் வேறு… சீட் பகிர்வில் விசிக-வை ஓரங்கட்டியதா திமுக?… அதிருப்தியில் திருமாவளவன்…?
SeithiSolai Tamil March 26, 2026 08:48 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக-விற்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள சூழலில், கட்சிகளின் ‘கருத்தியல் வலிமை’ என்பது இடப்பகிர்வின் போது ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்ற கசப்பான உண்மையை அவர் முன்வைத்துள்ளார்.

மேலும் பொதுவாக ஒரு கட்சியின் வாக்கு வங்கி மற்றும் தேர்தல் கால அரசியல் சூழல்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், அத்தகைய வரையறைகளுக்கு உட்படாத கட்சிகள் அவற்றின் சமூக அடையாளங்களை முன்னிறுத்தியே மதிப்பிடப்படுகின்றன என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், கொள்கைப் பகையை வீழ்த்துவதையும் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு விசிக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டணித் தலைமை என்பது அனைத்துக் கட்சிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டு வெற்றிக்கான உத்திகளை வகுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறிப்பாக இடதுசாரி மற்றும் கருத்தியல் உறுதிப்பாடு கொண்ட தோழமை சக்திகளை அரவணைத்து வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட அணுகுமுறை மட்டுமே ஒட்டுமொத்த கூட்டணிக்க்கும் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத் தரும் என்பது திருமாவளவனின் கருத்தாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.