அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக சரவணன் உறுதி செய்யப்பட்டு விட்டதாக சில மாதங்களுக்கு முன்பே பரவலாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி பச்சை கொடி காட்டியதால் அவர் தொகுதிக்குள் பிரச்சாரம் செய்து வந்தார்.
அதிமுக-வினர் மட்டுமின்றி திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் கூட சரவணன் தான் வேட்பாளர் என பேசினர். திமுகவில் வேட்பாளர் ரேஸில் உள்ளவர்கள் கூட, சரவணன் எங்களுக்கு ஃடப் கொடுப்பார் என்றனர்.
தஞ்சாவூர் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் கொடுக்கும் சரவணன்
எல்லோரும் இப்படி பேசிய நிலையில், அதிமுக கூட்டணியில் நேற்று யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது அறிவிக்கப்பட்டது. இதில் தஞ்சாவூர் பாஜக-வுக்கு என்றதும் சரவணன் உள்ளிட்ட பலரும் அதிர்ந்தனர். தஞ்சாவூர் சரவணனுக்கு இல்லையானு கேட்டு ஆதங்கப்பட்டனர். இது தஞ்சாவூருக்குள் பேசு பொருளானது.
சரவணின் ஆதரவாளர்கள் ரயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை முன்பு திரண்டனர். இந்த தகவல் சென்னையில் இருந்த சரவணனுக்கு சொல்லப்பட, சில நிர்வாகிகள் மூலம், தலைமை எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட வேண்டும், யாருக்கும், எதற்கும் நாமே இடம் கொடுக்க கூடாதுனு கலைந்து போக சொன்னாராம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் தொகுதி உனக்கு தான் வேலையை பார்னு எடப்பாடி பழனிசாமியே நம்பிக்கை அளித்தார். இப்போது தொகுதி பாஜக-வுக்கு சென்றது ஏன் எனவும் சரவணன் ஆதரவாளர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ``எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பே சிலரிடம் நீங்கதான் வேட்பாளர், வேலையை தொடங்குங்கள்னு பச்சை கொடி காட்டினாராம். இதில் தஞ்சாவூர் சரவணனுக்கு என்றும் சொல்லியிருக்கிறார்.
வைத்திலிங்கம் ஓபிஎஸ் அணியில் இருந்தபடி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எதிர்த்தார். டெல்டா அதிமுக-வில் சோழ மண்டல தளபதியாக வலம் வந்தவர் வைத்திலிங்கம். அவர் அதிமுகவில் எப்படியும் பவருக்கு வந்து விடுவார் என்பதால் பலரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் செல்வதற்கு தயங்கி நின்றனர். அந்த சமயத்தில் முதல் ஆளாக எடப்பாடி பக்கம் சென்றவர் சரவணன்.
அதன் பின்னரே முக்கிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பின்னால் சென்றனர். வைத்திலிங்கம் அணியில் இருந்த பலரை அதிமுவுக்கு அழைத்து சென்றார். இதனால் சரவணனுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்தார். சரவணனும் வைட்டமின்களை இறக்கி எடப்பாடி கையை வலுப்படுத்தினார். எடப்பாடி தஞ்சாவூர் வரும் போதெல்லாம் விமர்சையான வரவேற்பு கொடுத்தார். நினைத்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் பார்க்கும் வகையில் செல்வாக்குடன் வலம் வந்தார் சரவணன். கட்சியை உண்மையாக நேசிக்கும் உன்னை போன்றவர்களை தான் வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறக்க போறேனு 6 மாதத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார் இபிஎஸ். இரண்டு மாதத்திற்கு முன்பு இபிஎஸ் ஓகே சொல்ல உற்சாகமாக தேர்தல் பணிகளை தொடங்கினார் சரவணன்.
வார்டு வாரியாக வாக்கு சேகரித்தார். எங்கெல்லாம் வீக் என்று அலசி புள்ளிவிபரம் எடுத்தார். தேர்தல் பணிகளை செய்வதற்கு ஒரு டீமை இறக்கி முடுக்கி விட்டார். 90 சதவீதம் வேலையை முடிச்சிட்டார். தொகுதி மற்றும் வேட்பாளர் அறிவிக்க போறாங்கனு சொல்லிட்டு உற்சாகமாக சென்னை சென்றவர் தொகுதி பாஜக-வுக்கு என்று அறிவிப்பு வந்ததும் சரவணனின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் சுக்கு நூறானது.
தஞ்சாவூரில் முதல் ஆளாக எடப்பாடி கரத்தை பிடித்த சரவணனின் கையை இபிஎஸ் உதறிவிட்டதாக பலரும் பொறுமினர். அமமுகவில் எப்படி தினகரன், ரெங்கசாமியை கை விட்டாரோ சரவணனுக்கும். அதே போன்ற நிலைதான். சரவணனுக்கு தான் சீட்டுனு சொன்னாங்க, அவரும் பெரிய தொகை செலவு செஞ்சிட்டார், இப்ப தொகுதியை பாஜவுக்கு ஒதுக்கிட்டாங்க. சீட்டு இல்லாம சரவணன் தொகுதிக்குள்ள எப்படி போவார், எல்லோர் முகத்திலும் எப்படி முழிப்பார், நம்பிக்கையளித்து நட்டாற்றில் தள்ளி விட்டனர்னு சரவணன் ஆதரவாளர்கள் விம்முகின்றனர்.
வீட்டில் உள்ளவர்களை எப்படி சமாளிக்க போறேனு தான் தெரியலனு தழுதழுத்திருக்கிறார் சரவணன். இதையறிந்த இபிஎஸ், சவரணனை அழைத்து, ``சரவணா உன்னோட ஆதங்கம் புரியுது, நீ வேற தொகுதியில வேணா நில்லுனு' சொல்லியிருக்கிறார். நீண்ட நேர அமைதிக்கு பின்னர் சரவணன், அஞ்சு வருஷமா என்னோட தொகுதில வேலை செஞ்சிட்டு வெளில போய் எப்படி நிக்க முடியும். என் தொகுதியில நான் சர்வீஸ் செய்யணும், எனக்கு பதவி பெருசில்லை, தஞ்சாவூர் தான் முக்கியம்னு சொன்னாராம்.
`என்னை நம்பிய உனக்கு நான் நல்லது செய்வேனு' சால்சாப்பு செய்து அனுப்பியிருக்கிறார் இபிஎஸ். சீட் இல்லாமல் போனதும் அரசியல் சார்பின்றி சரவணனுக்காக பலரும் பரிந்து பேசி வருவதாக தெரிவித்தனர். சரவணனிடன் சிலர் கேட்டதுக்கு, `தலைமை எடுக்குற முடிவுக்கு கட்டுப்படணும், சீட்டு இல்லை என்றாலும் கட்சிக்கு உண்மையா இருக்கணும், என்னோட கடமையை மிக சரியா செய்யணும் இப்போதைக்கு இது தான் என் மனசுல ஓடுது' என்றுள்ளாராம்.
"ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் வேலை" - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்