தி.மு.க. அமைச்சர்களுக்கு நேரடி சவால்: 14 தொகுதிகளை கூட்டணிக்குக் கொடுத்த அதிமுக...! - எடப்பாடி பழனிசாமியின் புதிய யுக்தி
Seithipunal Tamil March 26, 2026 09:48 PM

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க. தலைமையில், பா.ஜ.க., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணியில், அ.தி.மு.க. 169 தொகுதிகளில் நேரடியாக களமிறங்குகிறது. கூட்டணி கட்சிகளுக்கு பா.ஜ.க.க்கு 27, பா.ம.க.க்கு 18, அ.ம.மு.க.க்கு 11, த.மா.கா.க்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு 1, புரட்சி பாரதத்திற்கு 1 என தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், எந்தக் கட்சி எந்த தொகுதியில் போட்டியிடும் என்ற முழு பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய கணக்குகளை கிளப்பியுள்ளார்.

குறிப்பாக, தி.மு.க. அமைச்சர்கள் போட்டியிடும் 14 முக்கிய தொகுதிகளில் அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடாமல், அவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருப்பது அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

இது ஒரு திட்டமிட்ட யுக்தியாக பார்க்கப்படுகிறது.அதன்படி, எ.வ.வேலு, பெரியகருப்பன், மனோ தங்கராஜ், நாசர், அனிதா ராதாகிருஷ்ணன், மதிவேந்தன் ஆகிய அமைச்சர்கள் உள்ள தொகுதிகள் பா.ஜ.க.க்கு வழங்கப்பட்டுள்ளன.

கே.என்.நேரு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் போட்டியிடும் தொகுதிகள் அ.ம.மு.க.க்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மேலும், அர.சக்கரபாணி, முத்துசாமி, ஆர்.காந்தி ஆகியோர் இருக்கும் தொகுதிகள் த.மா.கா.க்கு வழங்கப்பட்டுள்ளன.

சேலம் வடக்கு தொகுதி பா.ம.க.க்கும், குன்னம் தொகுதி இந்திய ஜனநாயக கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதி ஒதுக்கீடு, தி.மு.க. அமைச்சர்களை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளை முன்வைக்கும் புதிய அரசியல் தந்திரமாகக் கருதப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.