கிண்டி சிறுவர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வேடந்தாங்கல் ஈரநிலப் பறவைகள் கூண்டில் சில பறவைகளில் பறவைக்காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 20- ஆம் தேதி முதல் மூடப்பட்டிருந்த கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா மீண்டும் திறக்கப்பட உள்ளது. பூங்கா மூடப்பட்ட காலப் பகுதியில் பின்வரும் விரிவான சுத்திகரிப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அனைத்து நீர் ஆதாரங்களும் சுத்திகரிக்கப்பட்டன. மிருகங்களுக்கு வழங்கப்படும் உணவுகள் முறையாக சுத்தம் செய்து நச்சுநீக்கம் செய்யப்பட்டன. அனைத்து கூண்டுகளும் முழுமையாக நச்சுநீக்கம் செய்யப்பட்டன. ஒவ்வொரு கூண்டு நுழைவாயிலிலும் நச்சுநீக்க திரவம் கொண்ட காலடித்தொட்டிகள் அமைக்கப்பட்டன. உள்ளூர் கால்நடை பராமரிப்பு மற்றும் பொது சுகாதார துறைகளுடன் இணைந்து கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் காரணமாக மார்ச் 19- ஆம் தேதி முதல் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதால், கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா இன்று மார்ச் 27- ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தமாதம் பள்ளிகளுக்கு கோடைக்கால விடுமுறை விடப்படவுள்ளதால் கிண்டி சிறுவர் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதும்; மான்கள், மயில்கள், கிளிகள், மலைப்பாம்புகள் போன்ற விலங்குகள், பறவைகள் சிறுவர், சிறுமிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.