சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மற்றொரு பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சூழலில், நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய பூகம்பம் ஒன்று வெடித்தது. அங்கு பயிலும் மற்றொரு மாணவி, நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் எனக்குத் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வருகிறார். நேரடியாகவும், செல்போன் வாயிலாகவும் ஆபாசமாகப் பேசி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார். இந்த விவகாரத்தை வெளியில் சொன்னால் கல்வி மற்றும் வாழ்க்கையைத் தொலைத்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
மாணவியின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் அருண், இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் கோட்டூர்புரம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியரிடம் விசாரணை நடத்தவும், மாணவி அளித்துள்ள ஆதாரங்களை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்து அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது.