அமெரிக்காவிலிருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வுகளால் இந்தியாவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர்கள் (ஏறத்தாழ 41 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக ‘நேச்சர்’ இதழின் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. 1990-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியிடும் அளவுக்கு அதிகமான கார்பன் மாசினால், உலகப் பொருளாதாரத்திற்கு ஒட்டுமொத்தமாக 10 டிரில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாசுபாட்டினால் இந்தியாவைப் போலவே பிரேசில் நாடும் 330 பில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது. குறைந்த அளவு மாசுப்படுத்தும் நாடுகள் கூட, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் தவறான சுற்றுச்சூழல் செயல்பாடுகளால் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், உலகை மாசுபடுத்துவதில் அமெரிக்காவும் சீனாவும் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நாடுகள் வெளியிடும் நச்சுப் புகையினால் ஏற்படும் காலநிலை மாற்றம், ஒரு சூறாவளியைப் போல உலக நாடுகளின் பொருளாதாரத்தை மெல்ல மெல்ல அரித்து வருகிறது.
ஆரம்பத்தில் அமெரிக்கா இதில் முன்னணியில் இருந்த நிலையில், தற்போது சீனாவும் மாசுபாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. இது திடீரென ஏற்பட்ட இழப்பு அல்ல என்றும், கவனிக்கப்படாத சிறு காயங்கள் ஒருவரின் உயிரைப் பறிப்பதைப் போல, இந்த கார்பன் உமிழ்வுகள் நாடுகளின் பொருளாதாரத்தைப் படிப்படியாக வீழ்த்தி வருவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.