2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன.
என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க தரப்பில் களமிறங்கும் வேட்பாளர்களின் உத்தேசப் பட்டியலை அக்கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.
எல்.முருகன்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் பா.ஜ.க தரப்பில் மத்திய இணை அமைச்சரும் பா.ஜ.க-வின் முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் போட்டியிட இருப்பதாக அந்த அறிவிப்பில் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை 2011-ல் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கிறார்.
2021 தேர்தலில் தாராபுரம் தனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்டு ஆ. ராசாவிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், அவிநாசி தனி தொகுதியில் களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
L Murugan
பின்னணி குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், "இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் டபுள் என்ஜின் ஆட்சிதான் நடைபெற உள்ளது. அமைச்சர்கள், துணை முதல்வர் என ஆட்சியிலும் பா.ஜ.க முக்கிய பங்கு வகிக்க இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்க அமித்ஷா அவர்கள் அடுத்தக்கட்ட நகர்வுகளைச் செய்து வருகிறார்.
எல். முருகனுக்கு நிச்சயமாக துணை முதல்வர் பதவி கிடைக்க இருக்கிறது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் உள்ளடி வேலைகளைச் செய்யாமல் இருந்தால் போதும் எங்களுக்கு வெற்றி எளிதாக அமையும்" என்றனர்.
தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' - அதிமுகவினர் ஆதங்கம்!