திருட்டுப் பட்டம் கட்டி சித்திரவதை.. பெற்ற 2 மகள்களை 36 மணிநேரம் தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. கதறியும் தண்ணீர் கூட கொடுக்காமல் செய்த கொடூரம்.. சாங்லியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம்..!!
SeithiSolai Tamil March 27, 2026 12:48 PM

மகாராஷ்டிர மாநிலம் ஆட்பாடி தாலுகாவில், தன் சொந்த மகள்களையே தந்தை ஒருவர் மிகக்கொடூரமாகச் சித்திரவதை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தனது சகோதரர் வீட்டில் சிறுமி ஒருத்தி திருடியதாகச் சந்தேகப்பட்ட தந்தை தாது யம்கர், தனது 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களின் கை கால்களைக் கட்டி, வீட்டின் கூரையில் தலைகீழாகத் தொங்கவிட்டுள்ளார்.

சுமார் 36 மணி நேரம் பசி, தாகத்துடன் அந்தச் சிறுமிகள் உயிருக்குப் போராடியபோதும், அந்த நபர் அவர்களுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கொடுக்காமல் அராஜகம் செய்துள்ளார். அவர்களை விடுவிக்கச் சொன்ன தனது தந்தையையும், அந்த நபர் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து இரண்டு இரவுகள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையில், 9 வயது சிறுமி ரிதுஜா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு சிறுமி அனுஜா மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதலில் இயற்கை மரணம் என்று கூறி சிறுமியின் உடலை அடக்கம் செய்ய முயன்றபோது, மயக்கம் தெளிந்த மற்றொரு சிறுமி நடந்த கொடூரங்களை மருத்துவரிடம் விவரித்ததால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.