சமூக வலைதளங்களில் எப்போதுமே விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகும், ஆனால் இந்த வீடியோ பார்ப்பவர்களுக்குச் சிரிப்பையும் அதே சமயம் “தப்பு செஞ்சா தண்டிப்பேன்” என்கிற நீதியையும் ஒருசேரச் சொல்கிறது. ஒரு நபர் தனது வளர்ப்பு கழுதையை எவ்வித காரணமும் இன்றி பிடித்து வைத்துக்கொண்டு, அதன் முகத்தில் சரமாரியாக அறைந்து கொடுமைப்படுத்துகிறார்.
அந்த அப்பாவி மிருகம் தப்பிக்க முயன்றும், கயிற்றால் இறுகப் பிடித்துக்கொண்டு அந்த நபர் செய்த அராஜகம் காண்பவரை முகம் சுளிக்க வைத்தது. ஆனால், அடுத்த சில நொடிகளில் நடந்த ட்விஸ்ட் தான் இந்த வீடியோவின் ஹைலைட். அடித்து முடித்த கையோடு, அதே கழுதையின் முதுகில் ஏறி சவாரி செய்ய அந்த நபர் முயன்றார். அவ்வளவுதான், அதுவரை பொறுமையாக இருந்த அந்த கழுதை, சட்டென்று அந்த நபரின் காலைத் தனது வாயால் கவ்விப் பிடித்தது. அவர் காலை விடுவிக்கப் போராடியும், கழுதை விடவே இல்லை.
அந்த நபரின் அலறல் சத்தம் ஊரையே கூட்டும் அளவுக்கு இருந்தது. “அடிச்ச கையும், மிதிச்ச காலும் சும்மா இருக்காது” என்பது போல, அந்த நபர் செய்த அராஜகத்திற்கு அந்தக் கழுதை கொடுத்த பதிலடி இப்போது எக்ஸ் (X) தளத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. “மிருகத்தை மதிக்க கத்துக்கோங்கப்பா” என நெட்டிசன்கள் அந்த நபரை வறுத்தெடுத்து வருகின்றனர்.