இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் UPI பண பரிவர்த்தனை பரவி இருக்கிறது. மக்கள் ஒரு ஐந்து ரூபாய் பணம் செலுத்துவதாக இருந்தால் கூட அதனை UPI வாயிலாக தான் செலுத்துகிறார்கள். எங்கு சென்றாலும் கையில் பணத்தை கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை , மொபைல் போனும் UPI செயலியும் இருந்தால் போதும் எளிதாக நாம் பணம் அனுப்பி விட முடியும். பணம் அனுப்புவது எப்படி எளிமையாகிவிட்டதோ அதே போல UPI பண பரிவர்த்தனை நடைமுறையில் பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

இந்த மோசடிகளை தடுக்கும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய விதியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த விதிமுறை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நம்முடைய UPI , கார்டு மற்றும் வாலெட் பேமென்ட்கள் கூடுதல் பாதுகாப்பு கொண்டவையாக மாற இருக்கின்றன. அதாவது டிஜிட்டல் பேமென்ட்களுக்கு இரண்டு அங்கீகார சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுகிறது. இது நாள் வரை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் தர OTP உள்ளீடு செய்தாலே போதும். ஆனால் இனி OTP மட்டும் போதாது ஒவ்வொரு பண பரிவர்த்தினையும் இரண்டு முறை நாம் சரி பார்க்க வேண்டியதாக இருக்கும்.இதனை two factor authentication என அழைக்கிறார்கள்.
அதாவது ஒன்று ஓடிபி மற்றொன்று பின் நம்பர், பாஸ்வேர்டு, பயோமெட்ரிக் போன்றவற்றை நாம் கொடுக்க வேண்டியது இருக்கும். அதாவது நம்முடைய பண பரிவர்த்தனைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மோசடியாளர்கள் நமக்கே தெரியாமல் நம் கணக்கிலிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதை தடுக்கும் விதமாக இந்த இரண்டு முறை அங்கீகார சரிபார்ப்பு என்பது நடைமுறைக்கு வருகிறது.தற்போது ஓடிபி மட்டும் கொடுத்தாலே நம்முடைய வங்கி கணக்கில் இருந்து பணம் மற்றொரு வங்கி கணக்கு போய்விடுகிறது.

ஆனால் மோசடியாளர்கள் நம்முடைய போனை ஹேக் செய்வதன் மூலம் நமக்கே தெரியாமல் நம்முடைய போனுக்கு எஸ்எம்எஸ் வரவழைத்து நமக்கே தெரியாமல் அந்த ஓடிபி எடுத்து பயன்படுத்தி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். அது இனிமேல் நடக்காது.இதன்படி ஒரு OTP இரண்டாவதாக பின் நம்பர் அல்லது கைவிரல் ரேகை போன்ற பயோமெட்ரிக் தரவுகளை நாம் வழங்க வேண்டியதிருக்கும். இதன் மூலம் ஆன்லைன் பேமென்ட்கள் மிகவும் பாதுகாப்பானதாக மாறும். அடுத்த வாரத்தில் இருந்து இது நடைமுறைக்கு வருவதால் மக்கள் இவற்றை பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாக மாற்றி கொள்ளலாம்.