விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது. கட்சி தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல் தேர்தலில் தவெக தனித்து களம் காண்கிறது. அதுவும் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய். இந்நிலையில்தான், நுங்கம்பாக்கத்தில் இன்று தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய விஜய் ‘மக்கள் கூட்டணியான நமக்கும் ஸ்டாலின் சார் கூட்டணிக்கு மட்டும்தான் இந்த தேர்தல் நடக்கிறது. இது மக்களுக்கான காப்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம்.. ஒரு எம்எல்ஏ எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் சொல்கிறேன். தவெக எம்.எல்.ஏக்கள் எல்லை காப்பாளர்களாக இருக்க வேண்டும்.. அதனால்தான் நானே பார்த்து பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்திருக்கிறேன்.
மக்களோடு மக்களாக நிற்கும் நபர்களைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன். ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் நான் செல்ல முடியாது என்பதால் என்னுடைய பிரதிநிதிகளாக ஒவ்வொருவரையும் தேர்வு செய்திருக்கிறேன்.. மக்களே அவர்கள் எல்லோரையும் எம்எல்ஏ ஆக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’ என பேசியிருக்கிறார். அதன்பின் எந்த தொகுதியில் யார் போட்டி என்கிற பட்டியலை வாசித்தார். அதில், தான் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.