தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் முக்கிய கவனம் ஈர்த்த முடிவு—செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியில் களமிறக்கியது.
கடந்த தேர்தலில் கரூரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, இந்த முறை தொகுதி மாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் திமுகவின் தெளிவான அரசியல் வியூகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கொங்கு மண்டலம் பாரம்பரியமாக அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. இந்த பகுதியில் திமுக தொடர்ந்து சவால்களை சந்தித்து வந்த நிலையில், இந்த முறை அந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதில் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காகவே மேற்கு மண்டல பொறுப்பாளராக இருக்கும் செந்தில் பாலாஜி போன்ற ‘ஸ்ட்ராங்’ முகத்தை நேரடியாக களமிறக்கியுள்ளது.
கோவை தெற்கு தொகுதி அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானது. கடந்த தேர்தலில் கமல்ஹாசன் இங்கு மிக குறுகிய வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மேலும், அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போன்ற வலுவான போட்டியாளர்கள் இருக்கக்கூடிய சூழல் நிலவுகிறது.
இதனால், மக்களிடம் பரிச்சயமுள்ள மற்றும் களப்பணியில் திறமையான வேட்பாளரை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கேற்றவராக செந்தில் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக, கோவையில் திமுகக்கு வலுவான முகம் இல்லாத குறையை நிரப்பும் வகையில் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
மேலும், கரூர் தொகுதியில் உள்ள உள்ளக எதிர்ப்புகள் காரணமாகவும் இந்த மாற்றம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை தெற்கில் சிறுபான்மை மற்றும் பல சமூக வாக்குகள் சமநிலையுடன் இருப்பதால், வெற்றி வாய்ப்பு அதிகம் என திமுக கணக்கிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஏற்கனவே தொகுதி நிர்வாகிகளுடன் நேரடி தொடர்பில் இருந்து களப்பணிகளை தொடங்கியுள்ளார். கரூர் நிர்வாகிகளையும் கோவைக்கு கொண்டு வந்து வேலை செய்ய வைக்கும் திட்டமும் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த கால தேர்தல்களில் கோவையில் பெரிய அளவில் வெற்றி பெறாத திமுக, இந்த முறை ‘பவர் பிளேயர்’ ஒருவரை களமிறக்கி நிலைமையை மாற்ற முயற்சி செய்கிறது. இந்த முயற்சி பலிக்குமா? கோவை தெற்கு திமுகவுக்கு திறக்கும் வாயிலாக மாறுமா? என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.