சம்மர் வந்துடுச்சுனா, ரோஸ் மில்க் பிங்க் நிறத்துல கண்ணைக் கவரும். ஜூஸ்கள் கலர்ஃபுல்லா வரிசை கட்டும். ஐஸ்கிரீம்கள் ‘வாங்க வாங்க’னு கூப்பிடும். வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடன், ஒரு கப் குளிர்ந்த ஜூஸ் குடிப்பதோ, ஐஸ் சாப்பிடுவதோ உடனடி புத்துணர்ச்சி தருவது போல் தோன்றும். அதனால்தான் இந்த பானங்களின் விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.
சம்மர் டிரிங்க்ஸ் | Summer Drinks
ஆனால், இவை உண்மையிலேயே நம் உடலுக்கு ஆரோக்கியமா? ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் பால் எல்லாம் காய்ச்சப்பட்டதா? அதில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், சுவை சேர்க்கும் ரசாயனங்கள் பாதுகாப்பனதா என்பது பற்றி சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் பவித்ராவிடம் பேசினோம்.
"வெயிலில் உடலுக்கு குளிர்ச்சி தேவை என்பது சரி. ஆனால், அதற்காக செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது, ஐஸ்கிரீம்கள் சாப்பிடுவது தீர்வாகாது... செயற்கை நிறமூட்டப்பட்ட இந்தப் பொருள்கள் சில நேரங்களில் உடலில் ‘சின்னச் சின்ன’ பிரச்னைகளில் ஆரம்பித்து, பெரிய சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம். சில நேரங்களில் இந்தப் பிரச்னைகள் ஒரு நாள் இரண்டுல சரியாகலாம். ஆனால் சிலருக்கு மருத்துவமனை அட்மிஷன் வரை கொண்டு செல்லும் அளவிற்கு மோசமாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது.
கடைகளில் கிடைக்கும் ரோஸ் மில்க், ஜூஸ் போன்ற பானங்களில் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அதில் காய்ச்சாத பாலை சேர்ப்பார்கள். காய்ச்சாத அல்லது குளிரூட்ட பாலில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். இது வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரிசைக் கட்டும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் இவற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக வயிற்றுப்போக்கு பிரச்னை உடலில் உள்ள தண்ணீர்ச் சத்தின் அளவை இன்னும் குறைக்கும்.
மேலும், கவர்ச்சியான நிறத்திற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நிறங்கள் உடலுக்கு நல்லதல்ல. கண்ணுக்கு குளிர்ச்சி தரும் ஒவ்வொரு பானமும், உடலுக்குள் அமைதியா ஒரு பிரச்னையை உருவாக்கிக் கொண்டிருக்கலாம். சில நிறங்கள் அலர்ஜி, தோல் பிரச்சனைகள், தலைவலி போன்றவற்றை உண்டாக்கலாம். அடிக்கடி இப்படிப்பட்ட ரசாயனங்கள் உடலில் சேர்ந்து கொண்டே போனால், அது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பு தரும் அபாயம் உள்ளது.
இதோடு சேர்த்து, ஐஸ் தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரின் தரமும் முக்கியம். சுத்தமில்லாத தண்ணீரில் செய்யப்பட்ட ஐஸ், பாக்டீரியாக்கள், நுண்கிருமிகள் நிறைந்ததாக இருக்கும். அது உடலுக்குள் சென்றால், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
ஐஸ்
ஒரு கப் குளிர்ந்த பானம் குடித்த உடனே ரிலீஃப் கிடைத்த மாதிரி தோன்றினாலும், அதன் பின்விளைவுகள் சில நேரங்களில் கடுமையாக இருக்கலாம். அதனால்தான் ‘குளிர்ச்சி’ என்று பார்க்கும் போது, அது உண்மையில் ‘பாதுகாப்பானதா?’ என்று கேட்க வேண்டியது அவசியம்.
இயற்கையான குளிர்ச்சி – என்ன சாப்பிடலாம்:கோடைக் காலத்தில் உடலை குளிர்விக்க மிகச் சிறந்த வழி இயற்கை உணவுகள். நம் ஊரில் கிடைக்கும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடலாம். தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், நுங்கு போன்றவை உடலை உடனே குளிர்ச்சியாக்கும்.
அதற்குப் பிறகு, மோர் ஒரு சூப்பர் ஆப்ஷன். அதே போல நன்னாரி சர்பத் போன்ற பாரம்பரிய பானங்களும் நல்ல தேர்வு.
இளநீர், பற்றி சொல்லவே வேண்டாம். அது இயற்கையான எலக்ட்ரோலைட் டிரிங்க். உடலில் நீர்ச்சத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவும்.
சம்மர்
பழக்களாக சாப்பிடுவதே ஆரோக்கியம். ஆனால் அவசியம் ஜூஸ் குடிக்க வேண்டும் என்பவர்கள் வீட்டிலேயே ஜூஸ் செய்து குடிப்பது நல்லது. அதில் சர்க்கரை அளவையும் நாமே கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள் பழங்கள் மற்றும் ஜூஸ் குடிக்கும் போது மருத்துவரின் ஆலோசனைகள் எடுத்துக் கொள்வது நல்லது.
வெயிலுக்கு குளிர்ச்சி தேடுவது தவறு இல்லை… ஆனால் அது ‘உடலை குளிர்ச்சி அடைய வைக்கிறதா? அல்லது பாதிக்கிறதா?’ என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த சம்மரில் சின்ன கவனம் எடுத்தாலே, பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்" என்று விரிவாக விளக்கினார்.