Petrol Diesel Price: கலால் வரி 10 ருபாய் அளவிற்கு குறைத்தும், பொதுமக்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது ஏமாற்றமாக அமைந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கான, எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என பல தகவல்கள் பரவினாலும், போதுமான அளவிற்கு கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், பெட்ரோல் மீது 13 ரூபாயாக இருந்த கலால் வரியை 3 ரூபாயாக குறைத்துள்ளதோடு, டீசல் மீதான 10 ரூபாய் எனும் கலால் வரியை முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உள்ளூர் சந்தைகள் அழுத்தத்தில் இருக்கும் சூழலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பொதுமக்களுக்கான பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே தொடரும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதான தாக்குதலை தொடங்கியது முதல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இந்தியாவிற்கான ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது சுமார் 149 அமெரிக்க டாலர் அளவில் உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. அதன் விளைவாக தனியார் நிறுவனமான நயாரா, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயையும் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாயையும் உயர்த்தியது. இதனால், எரிபொருட்களின் விலையை உயர்த்துவதற்கான சூழல் உருவாகிவிட்டது என்ற அச்சம் பொதுமக்களிடையே பரவ தொடங்கியது. இந்நிலையில் தான் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை குறைக்க, தங்களுக்கான வரி வருவாயை மத்திய அரசு விட்டுக்கொடுத்துள்ளது. அதாவது, பொதுமக்களுக்கான விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, எண்ணெய் நிறுவனங்கள் செலுத்தும் வரியை குறைத்து, எரிபொருட்களின் விலை உயர்வதை மத்திய அரசு தடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வந்தாலும், சில்லறை விற்பனையில் விலையை உயர்த்தாமல், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடும் அழுத்தத்தில் இருந்தன. அதற்கான தற்காலிக சலுகையாகவே இந்த வரி குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் விலை குறைக்கப்படவில்லை, மாறாக அதிகமாகாமல் மட்டுமே தடுப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு இந்த வரி வருவாயை விட்டுக் கொடுத்தால் மத்திய அரசுக்கு மிகப்பெரிய வருவாய் பற்றாக்குறை ஏற்படக்கூடும். எனவே, விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடும் என்பதையே இந்த கலால் வரி ரத்து உறுதி செய்துள்ளது.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். இது வாக்காளர்களிடையே எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனை தவிர்க்கவே, வரி வருவாயை விட்டுக்கொடுத்து, சில்லறை விலை அதிகரிப்பை மத்திய அரசு தடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை 5 மாநில தேர்தல் முடியும் வரையில், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபடியே இருந்தால், நிச்சயமாக தேர்தல் முடிவுகளுடன், சில்லறை விற்பனையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கவும் அதிகளவில் வாய்ப்புள்ளது.